இலக்கணம்
இலக்கணம் என்பது தமிழ்ச் சொல் தான்.
வியாகரணம்/व्याकरण என்பது தான் சம்ஸ்கிருதச் சொல்.
Grammar என்ற பொருளில், வியாகரணம் என்ற சொல் மட்டுமே சம்ஸ்கிருத பாஷையில் பரவல்.
சப்த வித்யா/शब्दविद्या என்றும், காத்யாயனம்/कात्यायन என்றும் சில இடங்களில் அழைக்கப்பெறும். ஆனால் லக்ஷணம் என்று எங்கும், Grammar-ஐ, சம்ஸ்கிருத நூல்களே விளித்தது கிடையாது!
லக்ஷணம் என்ற சம்ஸ்கிருதச் சொல் தான், கிரந்தம் நீக்கி லக்கணம் ஆகி, இலக்கணம் ஆயிற்று என்று சிலர் முட்டாள்தனமாகக் கூறுவர்.
லக்ஷ்மி என்பது, தமிழில் இலக்குமி ஆவதில்லையா? அது போல லக்ஷணம் என்பதே இலக்கணம் ஆகியது என்று, ஓர் ஆய்வும் இன்றி, சம்ஸ்கிருத பாஷையும் அறியாமல், தாங்களாகவே சொல்லிக் கொள்கிறார்கள். ஊர்ப்புறத்திலே ஒரு பழமொழி சொல்லுவார்கள்: குதிரைக்குக் குர்ரம் என்றால் யானைக்கு யர்ரமா? அது போல் உள்ளது, இவர்களின் பிரஸ்தாபம்.
ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும்
ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும்
வழக்கி னாகிய உயர்சொல் கிளவி
"இலக்கண" மருங்கில் சொல்லாறு அல்ல! - (தொல்காப்பியம், சொல்லதிகாரம்; கிளவியாக்கம்: 510)
தொல்காப்பியர் நிறைய இடங்களில் இலக்கணம் என்னும் நேரடித் தமிழ்ச் சொல்லைப் பயன்படுத்துகிறார். இன்று கிடைக்கும் நூல்களில், தொல்காப்பியம் தான் ஆதிநூல். அதை விடவும் ஒரு சான்று வேண்டுமா? தொல்+காப்பு+இயம் = தொல்காப்பியம்!
தமிழ்க் காப்பியம் வேறு; சம்ஸ்கிருதக் காவ்யா/ काव्य வேறு.
தமிழ் அமிழ்தம் வேறு; சம்ஸ்கிருத அம்ருதம்/अमृत வேறு.
இரண்டும் ஒன்று போலவே ஒலிப்பதாலேயே, ஒன்றாகி விடாது. இரண்டும் வெவ்வேறு வேர்ச்சொற்கள்.
*தமிழில் அமிழ்தம் = இனிமை என்று பொருள்; அமிழ்த்துவதால் ஊறிக் கிடைப்பது இனிமை.
*சம்ஸ்கிருதத்தில், அம்ருதம் = சாகாமை என்று பொருள்; அ+மிருத்யு, சாவு இல்லாமை.
தேவாசுர யுத்தத்தில், மரணம் இலாமல் வாழ வேண்டிப் பாற்கடல் கடைந்த போது, கிடைத்த கதை தானே அ+ம்ருதம்! இப்படி, வேர்ச்சொற்களே வேறாக இருக்கும் போது, ஒன்று போல் ஒலிப்பதாலேயே, இருமொழியும் அறியாமல், அதான்பா இது என்று பிதற்றுவது பேதைமை!
*இலக்கு+இயம் = இலக்கியம்
*இலக்கு+அணம் = இலக்கணம்
இலக்கை எடுத்து இயம்புவது இலக்கியம். இலக்கை அடைய வழிவகுத்துக் கொடுப்பது இலக்கணம்.
இலக்கு என்பது ஒரு கொள்கைக் குறிக்கோளை குறிப்பது. ஒரு காப்பியத்தை எடுத்துக் கொண்டோமானால், அதில் என்னவெல்லாம் சொல்லப் போகின்றோம் என்பதைக் குறித்துக் கொள்வோம். சான்றாகச் சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டோமானால்,
*அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்
*ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்
*அறவீறு உள்ள பெண்களை (உரைசால் பத்தினி) உலகம் போற்றும்.
இவை தான் குறிக்கோள்கள், இலக்கு இயம்பலான இலக்கு+இயம்=இலக்கியத்துக்கு.
இந்த இலக்கை எவ்வாறு அடைவது என்று, செவ்வனே வழிகாட்டுவது இலக்கு+அணம்=இலக்கணம்.
ஒரு கதை எவ்வாறு சொல்லப்பட வேண்டும்? அதன் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ன? யார் ஆண்பால்/பெண்பால் பாத்திரங்கள்? எந்தத் திணையில், எந்தக் காட்சி?
எங்கெங்கெல்லாம் பண்ணோடு பாடல் பயிலலாம்? எங்கெங்கெல்லாம் பண் இல்லாமல் உரைப்பாடல்? உரைநடையாக வருகிறதா? பாடலாக வருகிறதா? அல்லது உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாக வருகிறதா?… இவ்வளவையும் எடுத்துச்சொல்ல வழியாக அமைவது இலக்கு+அணம்=இலக்கணம்.
அதனால், "இலக்கணம் தமிழ் கிடையாது, இலக்கணம் சம்ஸ்கிருதம் தான்" என்று கூறுவது ஒரு இழிவான மனநிலை. இவ்வளவு பெரிய ஒரு செம்மொழிக்கு, அதன் இலக்கணம் என்ற சொல்லே சம்ஸ்கிருதம் போட்ட பிச்சை என்பது மிகவும் இழி மனநிலையே. இதைத் தமிழ் ஒருபோதும் செய்யாது! சம்ஸ்கிருத மொழியும் தெரியாமல், சம்ஸ்கிருத வியாகரணமும் தெரியாமல், தமிழ் மொழியும் தெரியாமல், தமிழ் இலக்கணமும் தெரியாமல், பொய் பரப்ப வேண்டாமே?
சம்ஸ்கிருத வியாகரணம் (அஷ்ட த்யாயி) எழுதிய அறிஞர் பாணினியே ஓரிடத்தில், "ப்ரத்யய லோபே ப்ரத்யய லக்ஷணம்" என்கிறார்.
இதில் ப்ரத்யயம் என்றால் முன்னொட்டு/பின்னொட்டு என்று பொருள். அதாவது ஒரு சொல்லில் முன்னொட்டு/பின்னொட்டை நீக்கினாலும், அதன் இயல்பு (லக்ஷணம்) மாறாது என்கிறார்.
இங்கே லக்ஷணம் என்பது, இயல்பு என்ற பொருளில் தானே வருகிறது? இலக்கணம் (Grammar) என்ற பொருளில் வரவில்லை அல்லவா!
இப்படி ஆனானப்பட்ட சம்ஸ்கிருத மஹாவித்வான் பாணினியே சொல்லாத ஒன்றை,
இவர்கள் தாமாகச் சொல்வது தான் விஸ்வாமித்ர சிருஷ்டி! இது முற்றிலும் பேதைமை (அ) பொய்!
இலக்கணம் என்பது முழுக்க முழுக்கத் தமிழ்ச் சொல்லே!
Comments
Post a Comment